இறந்தவர்களுக்கான பிரார்த்தனைகள்   - பெண்களுக்கு - (#11273)

என் கடவுளே, குற்றங்களை மன்னித்துத் துன்பங்களைக் களைபவரே! பிழை பொறுப்பவரே, கருணைமிக்கவரே! கலங்கிய கண்களுடன் உமது தெய்வீக சாராம்சம் என்னும் அரசவையின்பால் எனது கெஞ்சுங் கரங்களை உயர்த்தி, உமது அருளினாலும்  இரக்கக் குணத்தினாலும், உமது மெய்ம்மை என்னும் அரியாசனத்தின்பால் விண்ணேற்றம் அடைந்துள்ள உமது இப்பணிப்பெண்ணை மன்னிக்குமாறு  உம்மை வேண்டிக் கொள்கின்றேன். பிரபுவே, உமது அருட்கொடை, தயை என்னும் மேகங்களைக் கொண்டு அவளுக்குப் பாதுகாப்பளிப்பீராக; உமது பிழைபொறுத்தல், மன்னிப்பு என்னும் சமுத்திரத்தில் அவளை மூழ்கச் செய்து, உமது தெய்வீக சுவர்க்கமான புனிதப்படுத்தப்பட்ட அவ்வுறைவிடத்தினுள் நுழைந்திட அவளுக்கு உதவிடுவீராக. நீர் மெய்யாகவே, வலிமை மிக்கவர், இரக்கமுடையவர், தாராளமானவர், கருணை மிக்கவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

இறந்தவர்களுக்கான பிரார்த்தனைகள்   - பெண்களுக்கு - (#11274)

பிரபுவே, எவரது கருணை சகலத்தையும் சூழ்ந்துள்ளதோ, எவரது குறைபொறுத்தல் எல்லாவற்றிற்கும் மேம்பட்டுள்ளதோ, எவரது வள்ளன்மை நேர்த்தி மிக்கதோ, எவரது மன்னிப்பும் தாராளத் தன்மையும் சகலத்தையும் உள்ளடக்கியுள்ளதோ, எவரது குறைபொறுத்தல் என்னும் தீப ஒளி உலகம் முழுவதையும் வியாபித்துள்ளதோ அவர் நீரே ஆவீர்! ஒளிக்கெல்லாம் பிரபுவே! பற்றார்வத்துடனும், கலங்கிய கண்களுடனும் உந்தன்பால் விண்ணெழுந்துள்ள உமது பணிப்பெண்ணின் மீது உமது கருணை என்னும் பார்வையினை விழச்செய்யுமாறு உம்மை வேண்டிக் கொள்கின்றேன். அவளுக்குத் தெய்வீக சுவர்க்கத்தின் ஆபரணங்களினால் பிரகாசித்திடும் உமது அருள் என்னும் மேலங்கியினை அணிவித்து, உமது ஒருமை என்னும் விருட்சத்தின் அடியில் அவளுக்குப் பாதுகாப்பளித்து, அவளது முகத்தை உமது கருணை, இரக்கம் என்னும் ஒளியினால் பிரகாசிக்கச் செய்வீராக. என் இறைவா, உமது பிழை பொறுத்தல் என்னும் ஆவியிலிருந்து பிறந்திடும் புனித நறுமணங்களை உமது தெய்வீகப் பணிப்பெண்ணுக்கு அருள்வீராக. அவளை உமது பேரானந்தமிகு உறைவிடத்தில் உய்திடச் செய்வீராக, உமது ஒன்றிணைதல் என்னும் பிணிதீர்க்கும் களிம்பினைக் கொண்டு அவளது துயரங்களைக் குணப்படுத்தி, உமது விருப்பத்திற்கிணங்க அவளை உமது புனித சுவர்க்கத்தினுள் நுழைய  அனுமதிப்பீராக.  உமது அன்பாதரவு  என்னும் தேவகணங்ளை அவள் மீது தொடர்ச்சியாக இறங்கச் செய்து, உமது ஆசீர்வதிக்கப்பட்ட விருட்சத்தின் கீழ் அவளைப் பாதுகாப்பீராக. மெய்யாகவே, என்றும் மன்னிப்பவரும், அதி தாராளமானவரும், அதி வள்ளன்மையாளரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

இறந்தவர்களுக்கான பிரார்த்தனைகள்   - பெண்களுக்கு - (#11275)

அன்புமிக்கப் பிரபுவே! நெஞ்சார  நேசிக்கப்பட்ட இப்பணிப்பெண்ணானவள் உந்தன்பால் ஈர்க்கப்பட்டு, ஆழ்ந்த சிந்தனை, அறிவுக்கூர்மை ஆகியவற்றின் மூலமாக உமது முன்னிலையை அடைந்து உமது இராஜ்யத்தில் பிரவேசிக்க பேராவல் கொண்டுள்ளாள். கலங்கிய கண்களுடன் அவள் உமது மர்மங்கள் என்னும் இராஜ்யத்தின்மீது தனது பார்வையைப் பதித்திட்டாள்.  அவள் உம்முடன் ஆழ்ந்து உறவாடுவதில் பல இரவுகளைக் கழித்தாள், பல நாள்கள் அவள் உமது உள்ளர்ந்த நினைவிலே வாழ்ந்தாள். ஒவ்வொரு காலையும் உம்மிடமே கவனம் செலுத்தினாள், ஒவ்வொரு மாலையும் உந்தன் மீதே தனது சிந்தனையை மையப்படுத்தினாள். பாடிடும் ஓர் இராப்பாடியைப் போல் அவள் உமது புனித வாசகங்களை ஓதினாள்,  ஒரு  கண்ணாடியைப் போன்று உமது ஒளியைப் பிரதிபலித்தாள். 

பாவங்களை மன்னிப்பவரே! விழிப்படைந்திட்ட இவ்வான்மா  உமது  இராஜ்யத்தில் நுழைவதற்கு வழி திறந்து, உமது கரத்தினால் பயிற்சியளிக்கப்பட்ட இப்பறவைதனை உமது நித்திய ரோஜாத் தோட்டத்தினில் உயரப் பறக்க உதவிடுவீராக. உமது அண்மையை  அடையவேண்டும் என்ற ஆவலினால் ஆர்வக்கனல் கொண்டுள்ளாள்; உமது முன்னிலையை அடைவதற்கு அவளுக்கு உதவுவீராக. உம்மிடமிருந்து பிரிந்ததால் அவள் குழப்பமும் துயரமும் உற்றிருக்கின்றாள்; உமது தெய்வீக மாளிகையினுள் அவளை நுழைய அனுமதிப்பீராக. 

பிரபுவே! நாங்கள் பாவிகள்; ஆனால், நீரோ மன்னிப்பவர். நாங்கள் குறைபாடுகள் என்னும் சமுத்திரத்தில் அமிழ்ந்துள்ளோம், ஆனால், நீரே மன்னிப்பவர், அன்புள்ளவர். எங்களின் பாவங்களை மன்னித்து உமது அபரிமிதமான அருளினைக் கொண்டு எங்களை ஆசீர்வதிப்பீராக. உமது வதனத்தைக் கண்ணுறும் சலுகையை வழங்கி, மகிழ்ச்சி, பேரானந்தம் என்னும் கிண்ணத்தினை எங்களுக்கு அருள்வீராக. நாங்களே எங்களின் சொந்த பழிச்செயலின் கைதிகள், நீரோ வள்ளன்மைமிகு சலுகைகளுக்கு அரசனானவர். நாங்கள் அநீதி என்னும் கடலினுள் அமிழ்ந்து கிடப்பவர்கள், நீரோ, எல்லையிலா கருணையின் பிரபு. நீரே வழங்குபவர், ஒளிமயமானவர், நித்தியமானவர், வள்ளன்மை மிக்கவர்; அருளாளரும், கருணைமயமானவரும், எல்லாம் வல்லவரும்,  வெகுமதிகள்      வழங்குபவரும்,   பாவங்களை மன்னிப்பவரும் நீரே. மெய்யாகவே,   எங்களின் குறைகளை மன்னிப்பவரும், பிரபுகளுக்கெல்லாம் பிரபுவானவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

